ராணிப்பேட்டையில் நர்சுகள் சிகிச்சை அளித்ததால் பிரசவத்தில் தாய், குழந்தை மரணம்

ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் தாய் குழந்தை பலியானதை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வாலாஜா:

ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது23) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அர்ச்சனா (19). தம்பதிக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அர்ச்சனா கர்ப்பமாக இருந்தார். இன்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.

அப்போது அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. 2 நர்சுகள் பெண் உதவியாளர் ஒருவர் இருந்தனர். அவர்கள் அர்ச்சனாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து சில மணி நேரத்தில் குழந்தை இறந்தது.

மேலும் அர்ச்சனாவின் உடல் நிலை மோசமானது . அவருக்கு நர்சுகள் சிகிச்சை அளித்துள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 7 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அர்ச்சனாவின் உறவினர்கள் மற்றும் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் ஆரம்ப சுகாதார மையம் முன்பு திரண்டனர்.

டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். முறையான சிகிச்சை அளிக்காததால் தான் அர்ச்சனா,குழந்தை இறந்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அர்ச்சனா மற்றும் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். உறவினர்கள் ஆம்புலன்சை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தாசில்தார் பாக்கியநாதன் ,காந்தி எம்.எல்.ஏ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தாய் மற்றும் குழந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமென கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய் குழந்தை முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com