

இந்தியா, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தாய்லாந்து நாட்டில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நாசர்கான் ஜனுஜா ஆகியோர் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு கடந்த 27-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடந்ததாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தனது பெயரை வெளியிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு நல்லவிதமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அஜித் தோவலின் பேச்சு நட்புடனும், நேர்மறையாகவும் இருந்தது. இந்த சந்திப்பு, இருநாட்டு தூதரக அளவில் நின்றுபோன சில நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆனால் இந்த சந்திப்பு குறித்து இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகவோ, அதிகாரப்பூர்வம் இல்லாமலோ யாரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
கடந்த 25-ந் தேதி, பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷண் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவி சந்தித்து பேசினார்கள். இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டுள்ள சமயத்தில், சமீபத்தில் நடந்த இந்த நிகழ்வும் ஒரு முக்கியமானதாக ஆகிவிட்டது.
ஜாதவை சந்திக்க அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் வருவதற்கும், அவரை சந்தித்து பேசுவதற்கும் மனிதாபிமான அடிப்படையில் தான் பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. ஆனால் பரஸ்பர ஒப்பந்தங்களை மீறிவிட்டதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜாதவின் குடும்பத்தினரிடம் பாதுகாப்பு என்ற பெயரில் கலாசாரம் மற்றும் மத ரீதியான உணர்வுகளை அவமதிக்கும் வகையில் பாகிஸ்தான் நடந்துகொண்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சந்திப்புக்கு 2 நாட்கள் முன்பு தான் ஜாதவ் குடும்பத்தினரை சந்தித்து பேசிய நிகழ்வு நடந்தது. எனவே ஆலோசகர்களின் இந்த சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் ஒரு மூன்றாவது நாட்டில் சந்தித்து பேசுவது இது முதல்முறை அல்ல.
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும், தங்கள் வெளியுறவு செயலாளர்களுடன் சேர்ந்து பாங்காக்கில் சந்தித்து பேசினார்கள். அந்த சந்திப்புக்கு பின்னரும் இரு நாடுகளும் அதனை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.