புதுவை சட்டசபையில் இருந்து என்ஆர் காங்கிரஸ்- அதிமுக, பா.ஜனதா கூண்டோடு வெளிநடப்பு

புதுவை சட்டசபையில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். #PondicherryAssembly
ரங்கசாமி தலைமையில் எதிர்க்கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த காட்சி.
ரங்கசாமி தலைமையில் எதிர்க்கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் வைத்திலிங்கம் இரங்கல் குறிப்பை வாசித்தார். இதைத்தொடர்ந்து சட்ட மசோதாக்களை சபையில் தாக்கல் செய்ய சபாநாயகர் உத்தரவிட்டார்.

முதல்- அமைச்சர் நாராயணசாமி நிதி ஒதுக்க சட்ட மசோதாவை தாக்கல் செய்ய தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எழுந்து குறுக்கிட்டு பேசினார்.

அவர் பேசும்போது, மத்திய அரசு ரூ.1500 கோடியை புதுவைக்கு ஒதுக்கியுள்ளது. ஏன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. கவர்னர் மாளிகையில் 6 நாள் தர்ணா போராட்டம் நடத்தினீர்களே? ஏன்? எதற்கு? அங்கு உள்ளே என்ன பேசினீர்கள்? என்ற விவரத்தை சபையில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் சபாநாயகர் இருக்கை அருகே சென்றார். அவரை பின்தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் சபாநாயகர் இருக்கை அருகே சென்றனர்.

இதற்கிடையே எதிர்க் கட்சித்தலைவர் ரங்கசாமியும் எழுந்து, ஆளும் திறமை இல்லாவிட்டால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள்? பதவியை விட்டு விலகிச் செல்லுங்கள். கவர்னரை ஏன் குறை சொல்கிறீர்கள்? போராட்டம் நடத்தினீர்கள்? மீண்டும் போராட்டம் நடத்துவேன் என்கிறீர்கள். இங்கு என்ன ஆட்சியா நடக்கிறது? திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் ஆட்சியை விட்டு விலகுங்கள். கவர்னரிடம் என்ன பேசினீர்கள்? என சபையில் சொல்லுங்கள் என்றார்.

அவருடன் சேர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அனைவரும் எழுந்து சபாநாயகர் எதிரே மைய மண்டபத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ரங்கசாமி மட்டும் இருக்கை அருகே நின்றபடி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து மசோதாவை வாசித்து கொண்டிருந்தார்.

இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் ஒட்டுமொத்தமாக எழுந்து சபையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். #PondicherryAssembly

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com