வடமாவட்டங்களைவிட தென்மாவட்டங்களில் அதிக மழை

இந்த ஆண்டு வடமாவட்டங்களைவிட தென்மாவட்டங்களில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது.
மழை
மழை
Published on

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்கிறது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் உயர வில்லை.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பன், தங்கச்சிமடம் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் அக்டோபர் 1-ந்தேதி முதல் நேற்று வரை 34 செ.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால், 30 செ.மீட்டர் மழை கிடைத்துள்ளது. 9 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இந்த கால கட்டத்தில் 30 செ.மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 8 செ.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.

இந்த ஆண்டு வடமாவட்டங்களைவிட தென்மாவட்டங்களில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை அதிகளவு பெய்துள்ளது. வட மாவட்டங்களில் மிக குறைந்த அளவில் மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com