

புதுவை சட்டமன்றத்திற்கு பா.ஜனதா கட்சியை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்தது.
இவர்களுக்கு நேற்றைய தினம் கவர்னர் கிரண்பேடி ரகசியமாக பதவி பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு தொடர்பாக ஆளும் கட்சிக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ எந்த தகவலும் தரப்படவில்லை.
அதேநேரத்தில் பா.ஜனதா கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரசார் விழாவில் பங்கேற்றனர். கவர்னர் மற்றும் மத்திய அரசின் இந்த செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள கருத்துகள் வருமாறு:
* புதுவையின் உரிமையை பா.ஜனதா பறிக்கிறது. இது தவறான முன்னுதாரணமாகி விடும். இதை அப்படியே விட்டு விட்டால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களே புதுவையில் நேரடியாக நியமன எம்.எல்.ஏ.க்களை இனிமேல் தேர்வு செய்வார்கள். இதை அனுமதிக்கக்கூடாது.
* கிரண்பேடியின் நேர்மை வேஷம் கலைந்து விட்டது. அவரின் காவி வேஷம் புதுவையில் இனி எடுபடாது. அவரின் அரசியல் துஷ்பிரயோகத்தை விரைவில் ஒடுக்கி புதுவையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரும் இணைவோம். மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் மதவெறி கவர்னரே புதுவையை விட்டு வெளியேறு.
* இது ஜனநாயக படுகொலை. புதுவை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. புதுவை மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரதிய ஜனதா குறுக்குசால் ஓட்டி நியமன எம்.எல்.ஏ.க்களை பெற்றிருப்பது வெட்கக்கேடானது.
* நியமன எம்.எல்.ஏ.க்களின் மூலம் அதிகாரம் யாருக்கு என்பதற்கு விடை தெரிந்துவிட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களால் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியாது என்றால் இனி தேர்தல் வைக்காதீர்கள்.
அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதாவை சேர்ந்த எம்பி, எம்.எல்.ஏ.க்களே இருக்க வேண்டும் என நினைத்து சர்வாதிகாரத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. இதற்கு புதுவை மக்கள் ஒன்றிணைந்து பாடம் புகட்ட வேண்டும்.
* மத்திய பா.ஜனதா அரசின் குறுக்குவழி ஐடியாவின்படி நியமன எம்.எல்.ஏ.வாகும் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வாங்கிய மொத்த ஓட்டுகள் ஆயிரத்து சொச்சம்தான். இதுதான் பா.ஜனதாவின் புதிய இந்தியா பிளான்.
* நியமன எம்.எல்.ஏ. பதவியேற்றிருக்கும் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள். பா.ஜனதா மாநில பொருளாளர் கே.ஜி.சங்கர் அய்யங்கார் வகுப்பை சேர்ந்தவர். புதுவையின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தோர் தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் பா.ஜனதாவின் சமூகநீதி.
* 4 தெருக்கு 3 எம்.எல்.ஏ.க்கள். புதுவை லாஸ்பேட்டை தொகுதியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ. துணை சபாநாயகராக உள்ளார்.
தற்போது சாமிநாதன், செல்வகணபதி என லாஸ்பேட்டையை சேர்ந்த 2 பேர் நியமன எம்.எல்.ஏ.வாகியுள்ளனர். இதனால் 4 தெருவுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உலா வருவார்களோ?
* இதற்கு பெயர்தான் நோகாமல் நுங்கு தின்பதா?.
* பா.ஜனதா நிர்வாகிகளை எம்.எல்.ஏ.க்களாக்க பரிந்துரை செய்தது கவர்னரின் நடுநிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
* குப்பை அள்ளுவது, சைக்கிள் பேரணி, நல்லவரைப் போல நடிப்பது என ஓராண்டாக அரங்கேறிய கிரண்பேடி நாடக தொடரின் கிளைமாக்ஸ் காட்சி அரங்கேறியுள்ளது.