இந்த ஆண்டில் இருந்து ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Haj
இந்த ஆண்டில் இருந்து ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

முஹம்மது நபியின் பிறப்பிடமான மக்கா நகரம் மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் புனித ‘ஹஜ் பயணம்’ மேற்கொண்டு வருகின்றனர்.

பத்து லட்சம் பேர் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், கடந்த 2012 ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்தனர்.

ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவதால் மக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் மதீனாவில் உள்ள முகம்மது நபி மசூதி ஆகிய இடங்களில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

இந்த நெருக்கடியை தவிர்ப்பதற்காக மேற்கண்ட மசூதிகளை விரிவுபடுத்தி கட்ட சவுதி அரசு முடிவெடுத்தது. இந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் உள்ளூர் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதமும், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதமும் குறைக்கப்படுவதாக கடந்த 2013 ஆண்டில் சவுதி அரசு அறிவித்தது.

இதையடுத்து, மூன்றாண்டுகளுக்கு முன்னர்வரை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டாண்டுகளாக இந்த ஒதுக்கீட்டில் மேலும் 35 ஆயிரம் இந்தியர்களுக்கு சவுதி அரசு அனுமதி அளித்தது. இதன் விளைவாக, இந்தியாவில் இருந்து கடந்த (2017) ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 25 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையேயான இந்த (2018) ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் சவூதி மந்திரி முகம்மது பென்டன் ஆகியோர் இடையே சமீபத்தில் டெல்லியில் கையொப்பமானது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு மேலும் 5 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் செல்வார்கள் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருந்தார்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஒருநபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில் இதற்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா நாட்டுக்கு ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அளிக்கப்படும் மானியத் தொகை இந்த ஆண்டில் இருந்து ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஹஜ் மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் அதிகாரம்பெற்ற குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டில் இருந்து ஹஜ் மானியத்தை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கண்ணியமான முறையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு இது என்றும் குறிப்பிட்ட அவர், ஹஜ் மானியத்துக்காக செலவழிக்கப்படும் தொகை இனி சிறுபான்மையினத்தவர்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என கூறினார். #Haj #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com