மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்- நிர்மலாதேவிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் சிக்கிய பேராசிரியை நிர்மலாதேவிக்கு நெல்லை மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிர்மலாதேவி
நிர்மலாதேவி
Published on

நெல்லை:

விருதுநகர் மாவட்டம் தேவக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேராசிரியர்களும் கைதாகினர்.

இந்த வழக்கில் நீண்ட நாட்களாக ஜாமீன் கிடைக்காமல் நிர்மலாதேவி சிறையில் இருந்து வந்தார். சிறையில் இருந்தபோது அவரை குடும்பத்தார் உள்பட உறவினர்கள் யாரும் சந்திக்கவில்லை. மேலும் ஜாமீன் எடுக்கவும் அவர்கள் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி வக்கீல்கள் ஏற்பாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீனில் வெளிவந்த பிறகும் குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்திக்க மறுத்தனர். இதனால் அவர் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் விசாரணைக்காக கடந்த 8-ந்தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. தனிமையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு தனக்குத்தானே பேசிக் கொண்டார்.

அங்கிருந்து புறப்பட மறுத்து பல இடங்களில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். மேலும் அன்று இரவு பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அழுது புலம்பினார். இது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பானது. இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்மலாதேவி நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை மனநல மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தனர். இதைத்தொடர்ந்து அவர் நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் பேராசிரியை நிர்மலா தேவியை சந்திக்க வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com