ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. #NickJonas #PriyakaChopra #Marry #WesternCeremony #India
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
Published on

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர் என்பதால் இரண்டு முறையிலும் திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் டிசம்பர் 1 (நேற்று) மற்றும் 2-ந்தேதிகளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் பாதிரியார் முன்னிலையில் மண ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

அதன்படி பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா, சகோதரர் சித்தார்த், உறவினர்களான பிரனிதி சோப்ரா, மன்னாரா சோப்ரா மற்றும் நிக் ஜோனசின் பெற்றோர் பால் கெவின் சீனியர், டெனிஸ், சகோதரர் கெவின், அவரது மனைவி டேனியல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர்.

இந்த திருமணத்தையொட்டி அரண்மனை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததுடன், யாரும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் வகையில் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களும் செல்போன் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com