

மும்பை:
ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் நிறைவு பெற இருப்பதைத் தொடர்ந்து இரண்டு புதிய திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களில் ரூ.303 விலையில் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை மற்றும் ரூ.309 விலையில் தண் தணா தண் சலுகைகளில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதே சலுகை தற்சமயம் ரூ.399க்கு வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.
புதிய ஜியோ திட்டங்களில் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி காலத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ஜியோ கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக புதிய மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் திட்டங்கள்:
ரூ.309 மற்றும் ரூ.509 பிரீபெயிட் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மற்ற இரண்டு திட்டங்களும் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. ரூ.309 திட்டத்தில் அன்லிமிட்டெட் டேட்டா, (தினமும் 1 ஜிபி) வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களில் இருந்து 56 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
ரூ.509 திட்டத்தில் பழைய சலுகைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டி இம்முறை 56 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய ரூ.349 மற்றும் ரூ.399 திட்டங்கள் Every Day More Value திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது, இதில் மற்ற நிறுவனங்களை விட 20 சதவிகிதம் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
புதிய ரூ.349 திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் 20 ஜிபி அளவு 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் எவ்வித டேட்டா பயன்பாட்டு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. 20 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும் டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி. அளவு குறைக்கப்பட்டு விடும். ரூ.399 திட்டமும் ரூ.309 திட்டத்தை போன்றே தினமும் டேட்டா வழங்குகிறது. எனினும் வேலிடிட்டி 84 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்கள் தவிர, ஜியோ ஏற்கனவே அறிவித்த முதல் ரீசார்ஜ் சலுகைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் ஜியோ தண் தணா தண் சலுகை மாற்றப்பட்டுள்ளது. ஜியோ பிரீபெயிட் திட்டம் ஆரம்ப விலை ரூ.19க்கு வழங்கப்படுகிறது. ஒருநாள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் 200 எம்பி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.
இதேபோல் ரூ.49 திட்டத்தில் மூன்று நாள் வேலிடிட்டி, 600 எம்பி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.96 திட்டத்தில் ஏழு நாள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் டேட்டா (தினமும் 1ஜிபி) அதன் பின் டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி.-யாக குறைக்கப்படும்.
ரூ.149 திட்டத்தில் 28 நாள் வேலிடிட்டியுடன் 2 ஜிபி 4ஜி டேட்டா, 300 இலவச எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ.999 திட்டத்தில் 90-நாள் வேலிடிட்டி, 90 ஜிபி 4ஜி டேட்டா, (தினமும் 1ஜிபி) அதன் பின் டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி.-யாக குறைக்கப்படும். ரூ.1,999 திட்டத்தில் 120 நாள் வேலிடிட்டி, 155 ஜிபி டேட்டா, அதன் பின் டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி.-யாக குறைக்கப்படும்.
இதேபோல் ரூ.4,999 மற்றும் ரூ.9,999 திட்டத்தில் முறையே 210 மற்றும் 390 நாள் வேலிடிட்டியில் 380 ஜிபி மற்றும் 780 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா முழுமையாக பயன்படுத்தியதும் டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி.-யாக குறைக்கப்படும். அனைத்து திட்டங்ளிலும் வாய்ஸ் கால்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோ போஸ்ட்பெயிட் திட்டங்கள்:
போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலை ரூ.309, ரூ.349, ரூ.399, ரூ.509 மற்றும் ரூ.999 விலைகளில் வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி மூன்று மாதங்களில் துவங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் சலுகைகள் மாறுபடும். புதிய திட்டங்கள் ரூ.349 மற்றும் ரூ.399 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இவை முறையே இரண்டு மற்றும் மூன்று மாதங்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
ரூ.349 திட்டத்தில் 20 ஜிபி 4ஜி டேட்டாவும், டேட்டா தீர்ந்ததும் நொடிக்கு 128 கே.பி.-யாக குறைக்கப்படும். ரூ.399 விலையில் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்கள் தற்சமயம் ஜியோ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.