நேபாளம் பாராளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றிமுகம்

நேபாளம் நாட்டு பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றனர்.
Published on

காத்மாண்டு:

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பாராளுமன்றம் மற்றும் 7 மாகாண சபைகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மாதம் 26-ம் தேதியும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 8-ம் தேதியும் நடைபெற்றது. 

மொத்தம் 128 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 256 மாகாணசபை உறுப்பினர்களை தேர்வு செய்ய நடந்த இந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு 1,663 வேட்பாளர்களும், மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு 2,819 பேரும் போட்டியிட்டனர்.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. பிற்பகல் நிலவரப்படி ஆளும்கட்சியான ஒன்றிணைந்த நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

வெளியான 30 பாராளுமன்ற தொகுதி வெற்றி நிலவரப்படி 26 இடங்களில்  ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் காத்மாண்டு மாவட்டத்திற்குட்பட்ட பத்து பாராளுமன்ற தொகுதிகளில் ஆளும்கட்சி வேட்பாளர்கள் மூன்று இடங்களிலும், எதிர்க்கட்சி இரு இடங்களிலும் வென்றுள்ளனர்.

மாகாண சபை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர்கள் 12 இடங்களிலும், எதிர்க்கட்சி இரு இடங்களிலும் வென்றுள்ளனர்.  ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 8 இடங்களிலும், எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், 44 தொகுதிகளில் ஆளுங்கட்சி வேட்பாளர்களும், 18 இடங்களில் ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களும், 12 தொகுதிகளில் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

மேலும் பல பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தொகுதிகளில் ஆளும்கட்சி வேட்பாளர்கள் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com