நேபாளம் ஆற்றின் உபரிநீர் திறப்பு - கோரக்பூர் மாவட்டத்தை வெள்ளம் சூழ்ந்தது

நேபாளத்தில் தொடர்ந்து பெய்த பெருமழையின் காரணமாக திறந்து விடப்பட்ட ரப்தி, ரோஹினி ஆற்றின் உபரிநீரால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நேபாளம் ஆற்றின் உபரிநீர் திறப்பு - கோரக்பூர் மாவட்டத்தை வெள்ளம் சூழ்ந்தது
Published on

நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன.

ரப்தி, புதிரப்தி மற்றும் ரோஹினி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு பாய்கிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள ஜாப்பா, மோராங், சன்சாரி, சப்ட்டாரி, சிராஹா, ரவுட்டாஹட், பன்க்கே, பர்டியா, டாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளநீர் அதிகமாக சூழ்ந்துள்ளது. இங்கு பல லட்சம் ஏக்கர்களில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் நாசமடைந்துள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் சுமார் மூன்றாயிரம் வீடுகள் வெள்ளநீரில் மூழ்கி முற்றிலுமாக அழிந்தன. சுமார் 35 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இன்று பிற்பகல் நிலவரப்படி மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சார்ந்த விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேபாளத்தில் ரப்தி, ரோஹினி ஆறுகளில் பாயும் உபரிநீர் இன்று திறந்து விடப்பட்டது. இதனால், அருகாமையில் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இன்று காலை 7 மனியளவில் இம்மாவட்டத்துக்குட்பட்ட டோம்னிகர் பந்த் பகுதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீர் ஜாபர் காலனி, பாரம்பூர், ரசுல்பூர், பிப்ராபூர் உள்ளிட்ட ஏழு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள வீடுகளை நீரில் மூழ்கடித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் இங்குள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் இப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து, இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜிவ் ரவ்ட்டேலா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com