

சென்னை:
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று பா.ம.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரதத்துக்கு பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் வக்கீல் காந்தி தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், கே.என். சேகர், மாம்பலம் வினோத் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், டாக்டர் ரவீந்திர நாத் வாழ்த்தி பேசினார்கள்.
உண்ணாவிரதத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். தமிழக மாணவர்கள் சமச்சீர் கல்வி பயின்று வருவதால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு தான் நீட் தேர்வு எளிது.
இந்தியா முழுவதும் 3377 மருத்துவ கல்வி சீட்டுகளில் 3000 சீட்டுகள் சி.பி.எஸ்.சி பாடம் படித்த மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர். மருத்துவ கல்வியில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு நிலையை மாற்ற வேண்டும்.
மருத்துவ உயர் பட்ட படிப்புகளில் தமிழக அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. 202 உயர்பட்டப்படிப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என நிர்பந்திக்கிறது. தமிழகத்தின் உரிமையை நாம் இழந்து கொண்டு வருகிறோம்.
தமிழக அரசு கையாலாகாத அரசாகத்தான் செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு ‘நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய அரசுக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக் கும் வரை பா.ம.க. போராடும்.
இவ்வாறு அவர் பேசினார்.