ஊழல் வழக்கு: இன்றைய விசாரணையில் நவாஸ் ஷெரிப் ஆஜராகவில்லை

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் முதல்நாள் விசாரணையில் இன்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆஜராகவில்லை.
ஊழல் வழக்கு: இன்றைய விசாரணையில் நவாஸ் ஷெரிப் ஆஜராகவில்லை
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் அந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக நவாஸ் ஷெரிப் மகன்களான ஹுசைன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோரும், பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் டர் ஆகியோரும் நவாஸ் ஷெரிப்பின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் ஒரு அம்சமாக தன்னிடமோ, தனது குடும்பத்தாரிடமோ தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விசாரணை நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் எனவும் நவாஸ் ஷெரிப் குறிப்பிட்டிருந்தார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து, அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறும், ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 19-ம் தேதி அன்று நடைபெறும் முதல் விசாரணையின்போது நேரில் ஆஜராகுமாறு நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகன்களான ஹசன் நவாஸ், ஹுசைன் நவாஸ் ஆகியோருக்கு தேசிய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷிர் சம்மன் அனுப்பினார். 

நவாஸ் ஷெரிப் குடும்பத்துக்கு சொந்தமான ‘ஃபிளாக்‌ஷிப்’ நிதி நிறுவனம் தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதாக அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தார் யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. 

நவாஸ் ஷெரிப்பின் அரசியல் ஆலோசகர் ஆசிப் கிர்மானி கோர்ட்டில் ஆஜராகி, புற்றுநோய்க்காக தீவிர சிகிச்சை பெற்றுவரும் தனது மனைவி குல்சூம் ஷெரிப்புக்கு துணையாக நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் தங்கியுள்ளதால் இன்றைய விசாரணைக்கு அவர்களால் ஆஜராக இயலவில்லை என தெரிவித்தார்.

இந்த காரணத்தை ஏற்றுகொண்ட நீதிபதி விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com