

மங்களகிரியை சேர்ந்த துர்கா தினேஷ் ஆன்லைனில் சூதாடுவதற்காக திருடனாக மாறி பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்து வந்துள்ளார்.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மங்களகிரியை சேர்ந்தவர் துர்கா தினேஷ் என்கிற சாய். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதில் பணத்தை இழந்து வந்தார். நண்பர்கள், உறவினர்களிடம் லட்சக்கணக்கில் கடனை வாங்கி பணத்தை இழந்தார்.
பின்னர் ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக தனது கிட்னியை விற்பனை செய்து விளையாடி வந்தார். அதிலும் பணத்தை இழந்தார். துர்கா தினேஷ் என்றால் அப்பகுதி மக்களுக்கு தெரியாது. சிங்கிள் கிட்னி சாய் என அழைத்தனர்.
பின்னர் ஆன்லைனில் சூதாடுவதற்காக திருடனாக மாறி பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்து வந்தார். இவர் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலமுறை ஜெயிலுக்கு சென்று வந்தார்.
அப்போது ஜெயிலில் இருந்த ஏசு ராஜா, ஷேக் நாகூர் பாஷா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. 3 பேரும் ஜாமினில் வெளியே வந்த பிறகு பல் நாடு, எரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்தனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள் குவிந்து வந்தது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு மங்களகிரி பெட்ரோல் நிலையம் அருகே ஒருவர் போர்வையால் மூடிக்கொண்டு நடந்து சென்றார். இதனை கண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரணை நடத்துவதில் அவரது பெயர் ஏசு ராஜா என்பது தெரிய வந்தது.
ஏசு ராஜாவை போலீசில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் துர்கா தினேஷ் மற்றும் ஷேக் நாகூர் பாஷாவுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 பவுன் தங்க நகைகள், 5.4 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.