கர்நாடக வனப்பகுதியில் யானை மீது கல் வீசிய வாலிபர்- வனத்துறை கண்டனம்

யானை மீது கல்வீசிய நபரை பிடிக்க வனத்துறையினர் மொபட்டின் வாகன பதிவு எண்ணை வைத்து தேடி வருகிறார்கள்.
கர்நாடக வனப்பகுதியில் யானை மீது கல் வீசிய வாலிபர்- வனத்துறை கண்டனம்
Published on: 
Summary

யானைகளை தொடர்ந்து துன்புறுத்துவது மனித-விலங்கு மோதலை அதிகரிக்கும். எனவே விலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது.

அதில் மொபட்டில் சென்ற 2 பேர் வனப்பகுதியில் சாலையின் ஓரம் வண்டியை நிறுத்துவதும், மொபட்டின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த நபர் சாலையின் எதிரே நின்று கொண்டு இருந்த ஒரு யானைக்கு அருகில் சென்று கல்லை எடுத்து யானை மீது வீசுவதும், பின்னர் அந்த யானை தன்னை விரட்டக் கூடும் என்பதை அறிந்து சிரித்தப் படியே அந்த நபர் மொபட்டில் ஏறி செல்வதும், அவர்களை நோக்கி யானை வருவதும் இடம் பெற்று இருந்தது.

யானை

இந்த வீடியோ வெளியானதும் வனஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கர்நாடக வனத்துறையினரும் இது குறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது யானை மீது கல்வீசி எறிந்த வனப்பகுதி மைசூர் மாவட்டம் நாகரஹோலே வனப்பகுதி என்பதை கண்டறிந்தனர்.

மேலும் யானை மீது கல்வீசிய நபரை பிடிக்க வனத்துறையினர் மொபட்டின் வாகன பதிவு எண்ணை வைத்து தேடி வருகிறார்கள்.

வனப்பகுதி

இது குறித்து கர்நாடக வனங்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியதாவது:-

சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவரும் ஒரு காணொளியை நான் பார்த்தேன். அதில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், நாகரஹோலே வனப்பகுதியில் சாலையோரத்தில் நின்று இருந்த யானை மீது வேண்டுமென்றே கற்களை எறிந்து வனவிலங்குகளுக்கு எதிரான கொடுமையை செய்துள்ளனர்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்

இது மிகுந்த கவலைக்குரிய மற்றும் கண்டனத்திற்குரிய ஒரு விஷயமாகும். இந்த வழக்கை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு காணொளியில் உள்ள இருசக்கர வாகனம் மற்றும் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சரணாலயங்கள் என்பவை வன விலங்குகளின் வாழ் விடங்களாகும். அங்கு அவை தங்கள் விருப்பப்படி வாழ்கின்றன. வன விலங்குகளை பொழுது போக்குக்காக நடத்தக்கூடாது என்று வனச் சட்டம் கூறுகிறது. அவர்கள் இருவரும் வேண்டும் என்றே யானையை தாக்கியுள்ளனர்.

இத்தகைய நடத்தை அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல, மற்ற பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். யானைகளை தொடர்ந்து துன்புறுத்துவது மனித-விலங்கு மோதலை அதிகரிக்கும். எனவே விலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது.

யானை மீது தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர். யானை மீது கற்களை வீசி தாக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X