கேரளத்தில் 3 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

மலைப் பகுதிகள் மற்றும் கொச்சி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்
Rain
Published on: 
Summary

கடுமையான இடி-மின்னல் தாக்கங்கள் இருக்கும் என்பதால் பொதுமக்கள் திறந்த வெளிகளில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கேரளம் மாநிலம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருகிற 10-ந்தேதி வரை இந்த மழை இருக்கும் என்றும் அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழையின் காரணமாக இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (9-ந் தேதி) பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களிலும், 10-ந்தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மலைப் பகுதிகள் மற்றும் கொச்சி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் சேர்த்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் (சில நேரங்களில் 50 கி.மீ வரை) பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மேலும், கடுமையான இடி-மின்னல் தாக்கங்கள் இருக்கும் என்பதால் பொதுமக்கள் திறந்த வெளிகளில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மலைப்பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு (குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா வழியாக) பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், உள்ளூர் வானிலை மாற்றங்களைச் சரிபார்த்து விட்டுப் பயணத்தைத் தொடங்குவது பாதுகாப்பானது என்றும் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com