

பெண்கள் தங்களுக்கு தாங்களே சொந்தமானவர்கள் என்றும் தங்கள் தந்தைக்கோ, கணவனுக்கோ அல்லது மகன்களுக்கோ சொந்தமானவர்கள் கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
மேலும், ஒரு பெண் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண் உறவினர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் விதிமுறை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் நலத் திட்டமான 'சத்ரோன் கி கூஞ்ச்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்தியப் பெண்களின் 70 கோடி தனித்துவமான பயணங்கள், தனித்துவமான கற்பனைத்திறன், தனித்துவமான கனவுகள் தான் இந்தியாவின் மிகப்பெரிய பலமாக உள்ளது.
குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தன் தந்தைக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும், இளமைப் பருவத்தில் அவள் தன் கணவனுக்குச் சொந்தமானவள், அவளது கணவன் இறந்த பிறகு, அவள் தன் மகன்களுக்குச் சொந்தமானவள் என்று மனுஸ்மிருதி தெளிவாகக் கூறுகிறது.
ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது. இந்த வார்த்தைகள் வெட்கக்கேடானவை. இந்த வார்த்தைகள் பேசப்பட்டிருக்கவே கூடாது.
நீங்கள் உங்களைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமானவர் அல்ல. உங்கள் தந்தை, சகோதரர், கணவர், மகன் ஆகியோருடன் உங்களுக்கு உறவு இருக்கலாம், ஆனால் நீங்கள் அவர்களுக்கு சொந்தமானவர் அல்ல, நீங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.
நான் சொற்பொழிவாற்றவோ அல்லது அரசியல் விவாதிக்கவோ இங்கு வரவில்லை; மாறாக, இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், கருத்துக்களைக் கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே வந்துள்ளேன்.
கூண்டைத் தகர்த்தெறியுங்கள் என்ற கூட்டத்தில் பேச எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெண்களாகிய நீங்கள் தனித்துவமானவர், நீங்கள் சிறப்பானவர், நீங்கள் ஒரு தனிநபர், மேலும் உங்களுக்கென சொந்தக் கனவும் தொலைநோக்குப் பார்வையும் உண்டு.
பெண்கள் இயல்பாகவே ஆண்களை விட அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், மென்மையானவர்கள், கருணையுள்ளவர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என்பதே எனது வாதம்.
பெண்கள் பெரும்பாலும் மகள், மனைவி அல்லது தாய் என்ற மூன்று அடையாளங்களுக்குள் முடக்கப்பட்டனர்; இந்த உறவுகளில் தவறொன்றுமில்லை என்றாலும், இவை மட்டுமே அவர்களின் ஒரே அடையாளமாக இருக்க முடியாது.
பெண்கள் தொழில் வல்லுநர்களாகவும் விளையாட்டு வீராங்கனைகளாகவும் பல்வேறு துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டாலும், அவர்களின் அடையாளங்கள் பெரும்பாலும் ஆண்களுடனான உறவுகளின் மூலமே வரையறுக்கப்படுகின்றன” என்று ராகுல் காந்தி கூறினார்.