டாலருக்கு போட்டியாக பிரிக்ஸ் நாணயம் உருவாக்கப்படுமா? - பதில் இதுதான்

பிரத்யேக நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி பல காலமாக உள்ளது.
புதின், மோடி, ஜி ஜின்பிங் பாரத் மண்டபம் வெளியே மரம் நட்ட காட்சி
புதின், மோடி, ஜி ஜின்பிங் பாரத் மண்டபம் வெளியே மரம் நட்ட காட்சி
Published on
Summary

டாலருக்கு எதிரான பிரிக்ஸ் நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

சர்வதேச பொருளாதார பரிவர்த்தனைகள் டாலரின் ஆதிக்கத்தை எதிர்க்க பிரிக்ஸ் நாடுகளுக்கென்று பிரத்யேக நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி பல காலமாக உள்ளது.

ரஷியா, சீனா ஆகியவை அதற்கு மறைமுகமாக ஆர்வம் காட்டினாலும் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகள் அதற்கு தயக்கம் காட்டுகின்றன.

இந்நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இதுகுறித்து ஏதேனும் முன்னெடுப்பு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் பிரிக்ஸ் அமைப்பின் நாணயக் கொள்கைகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார செயலாளர் சுதாகர் தலேலா விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்

பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கென பொதுவான தனி நாணயம் உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று சுதாகர் தலேலா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், "உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகச் செலவைக் குறைப்பதற்காகத் தங்களின் சொந்த (உள்நாட்டு) நாணயங்களிலேயே இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தே ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்வதும், பணம் செலுத்தும் வழிமுறைகளை எளிதாக்குவதும் சர்வதேச பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்காக அன்றி, உலகளாவிய வர்த்தகத்தை எளிதாக்கும் ஒரு துணை நடவடிக்கை மட்டுமே" என தெரிவித்தார். 

டெல்லி பிரகடனம்

நேற்று பிரிக்ஸ் மாநாட்டில் "டெல்லி பிரகடனம்" வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு நாட்டின் தேசிய முன்னுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், உள்நாட்டு நாணயங்கள் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்த ஆலோசனைகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை கடந்த பணப் பரிவர்த்தனைகளை அதிவேகமாகவும், குறைந்த செலவிலும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை 'பிரிக்ஸ் பேமெண்ட் டாஸ்க் போர்ஸ்' ஆய்வு செய்து வருகிறது.

உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்குப் புறம்பாக விதிக்கப்படும் ஒருதரப்பு வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு டெல்லி பிரகடனம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு இணையான அல்லது டாலர் சார்ந்த அழுத்தத்தை குறைக்கும் பிரிக்ஸ் நாடுகளின் இந்த முயற்சியை அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே உள்நாட்டு நாணயப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com