பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது?- உச்ச நீதிமன்றம்

நாங்கள் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை.
Supreme Court
Published on: 
Summary

பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விவகாரங்கள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பண்டிகைக் காலங்களில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

வழக்கு விசாரணையின் போது, ஆரோக்கியத்துக்கும் மத நம்பிக்கைகளுக்கும் இடையேயான சமநிலையைப் பேண வேண்டும் என்று வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்குப் பதிலளித்த நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, "பட்டாசு வெடிப்பதில் என்ன மத நம்பிக்கை இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், "நாங்கள் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. அதேசமயம், மக்கள் தாமாக முன்வந்து இதற்கான முடிவை எடுக்க வேண்டும். இந்த முழுச் செயல்முறையிலும் ஒரு சமநிலையான அணுகுமுறை இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், சமூகமே விழிப்புணர்வு பெற்று மக்கள் தாமாகவே பட்டாசு வெடிப்பதை நிறுத்த முன்வருவார்கள்" என்று தெரிவித்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு மற்றும் மக்கள் இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகள் மற்றும் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகள் குறித்து மக்களிடையே உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒலி மற்றும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில், பட்டாசுகளைக் குறைந்த நேரங்களில் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

கடைகளில் விற்கப்படும் பட்டாசுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்; அதேவேளையில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளின் விற்பனைக்கு அனுமதி வழங்கலாம். தீபங்கள் மற்றும் கம்பி மத்தாப்புகளைப் பயன்படுத்தும் பாரம்பரியமான மற்றும் பாதுகாப்பான கொண்டாட்ட முறைகளுக்கு மக்கள் மீண்டும் திரும்புவதை ஊக்குவிக்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com