

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இதன்மூலம் மேற்கு வங்கத்தில் முதல் முறை பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்றது.
இருந்தபோதும் அதில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்தனர். எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களையே சட்டமன்ற எதிர்க்கட்சியாக சட்டமன்ற சபாநாயகர் அங்கீகரித்தார்.
இதனிடையே மத்தியிலும் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை மாநிலங்களவை எம்பிக்கள் இடையே பிளவு ஏற்பட்டது. 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி என்சிபிஐ என்ற பிராந்திய கட்சியில் இணைந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் முடிவை அங்கீகரித்தார்.
மோடி தலைமையிலான என்டிஏ எம்பிக்கள் கூட்டத்திலும் இந்த 20 பேர் பங்கேற்றனர். இதனிடையே கட்சி மாறிய எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திரிணாமுல் காங்கிரசில் மம்தா தலைமையிலான அணி சபாநாயகரை அணுகியது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி இதுதொடர்பாக சபாநாயகரை அணுகிறார்.
இந்த 20 எம்பிக்களையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஜூனில் மனு அளித்தும், ஆகஸ்டில் நேரில் சந்தித்தும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டதால், அபிஷேக் பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 20 மக்களவை எம்பிக்கள் வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது அல்லது இணைவது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவரது மனுவில் தெரிவித்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோஹனா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு தொடர்பாகத் தங்களது விளக்கத்தை அளிக்குமாறு 20 எம்பிக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்பட்டது.
இந்த விவாகரத்தில் சபாநாயகரின் காலதாமதத்தை சுட்டிக்காட்டியபோதும் மக்களவை சபாநாயகர் ஒரு அரசியலமைப்புப் பதவி என்பதால் அவருக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது
சபாநாயகர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சபாநாயகர் ஏற்கனவே இது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.