

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் மற்றும் அவரின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்ட காங்கிரஸ் தலைவர் அனிசூர் ரஹ்மான் (50). இவரது 24 வயது மகன் அபு சுபியான் வழக்கறிஞராக உள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் காரில் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, நகாடி ரெயில்வே கேட் அருகே ஒரு கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது.
காரை நோக்கி முதலில் துப்பாக்கியால் சுட்ட கும்பல், பின்னர் இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளாக கண்டறிப்பட்ட திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஹரநகர் கிராம பஞ்சாயத்து தலைவர் பாத்திமா பீவி, சாஜேப் ஷேக் மற்றும் மித்து ஷேக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கிருஷ்ணாநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 9 நாட்கள் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் இருக்கும் பாத்திமா பீவியின் கணவர் ஜப்பார் ஷேக் தான் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்ட முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், சுதந்திர தின நாளில் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நடப்பது மக்களின் பாதுகாப்புக்கும், சுதந்திரமாக அரசியல் செய்வதற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.