

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமேலவை தேர்தல் முடிவுகள் படித்த வாக்காளர்களின் தீர்ப்பை பிரதிபலிப்பதாகவும், அவை சாதாரண பொதுமக்களின் தீர்ப்பை பிரதிபலிக்கவில்லை என்றும் அம்மாநில பாஜக கூட்டணியை சேர்ந்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் சட்ட மேலவைக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது, அதில் 11 இடங்களில் பாஜக கட்சியும், 6 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றது.
உத்தரப் பிரதேசத்தில் 2027-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சட்ட மேலவைத் தேர்தல், பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையேயான ஒரு கௌரவ போராட்டமாகவும் பரவலாக கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் படித்த பட்டதாரிகள் அதிகளவில் காணப்படுவதாகவும், அதன் காரணமாக சட்டமேலவை தேர்தலில் பாஜகவை சமாஜ்வாடி கட்சி தோற்கடித்துள்ளதாகவும் அமைச்சர் ஓம் பிரகாஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஓம் பிரகாஷ் கூறுகையில், “மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது படித்த மக்களின் தீர்ப்பு.
இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இவை படித்த மக்களின் வாக்குகள், சாமானிய மக்களின் வாக்குகள் அல்ல.
சட்டமன்ற தேர்தலின்போது, இதே படித்த மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வரமாட்டார்கள். அப்போது, சாமானிய வாக்காளர்களே வாக்குச் சாவடிகளில் காணப்படுவார்கள்,” என அவர் கூறினார்.
இதையடுத்து பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்த வேளையில், சமாஜ்வாடி கட்சி வெற்றி பெறாது என எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இன்னும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
நாங்கள் இது குறித்து ஆராய்வோம். சமாஜ்வாடி கட்சி வெற்றி பெறக் கூடாத இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் சுயபரிசோதனை செய்வோம்.
வரவிருக்கும் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் முயற்சிகள் மேற்கொள்வோம்,” என்று மௌரியா கூறினார்.