

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என தேவஸ்தான அலுவலகம் முன்பாக பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
விஐபி தரிசனம்
திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என தேவஸ்தான அலுவலகம் முன்பாக பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவச தரிசன காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். தரிசன வரிசையில் இருந்து கோகர்ப்பம் அணை வரை சுமார் 2 கி.மீ. தூரம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து குறையாமல் உள்ளதால் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் நன்கொடை வழங்கும் பக்தர்கள் எண்ணிக்கை 250-ஆக குறைத்துள்ளனர்.
பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று முதல் 5-ந் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நீண்ட தூரங்களில் இருந்து வி.ஐ.பி பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்களுடன் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் நீண்ட தூரங்களில் இருந்து ரெயில், பஸ்கள் மூலம் சிரமப்பட்டு தரிசனத்திற்கு வந்து இருக்கிறோம் எனவே வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என தேவஸ்தான அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவஸ்தான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருப்பதியில் நேற்று 78,723 பேர் தரிசனம் செய்தனர். 37,664 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.63 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.48 லட்சம் லட்டுகள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.