VIDEO- வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி இழுத்துச் சென்ற காதலன்- லக்னோவில் பரபரப்பு!

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
drags girlfriend with his car
Published on
Summary

ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து காதலித்து வந்த நபர் ஒருவர், தட்டிக் கேட்ட காதலியை காரால் மோதி, காரின் முன்பகுதியில் (போனட்) வைத்து இழுத்துச் சென்று ஏற்றி இறக்கிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையை கண்டுபிடித்த காதலி

லக்னோவைச் சேர்ந்த அனாமிகா என்ற பெண், 'யஷ் தாகூர்' என்ற பெயரில் அறிமுகமான ஷாநவாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷாநவாஸ் தனது உண்மையான பெயர் மற்றும் அடையாளத்தை மறைத்து ஏமாற்றியதை அனாமிகா கண்டறிந்துள்ளார். மேலும், இன்று காலை பூங்கா ஒன்றின் அருகே ஷாநவாஸ் வேறு ஒரு பெண்ணுடன் டீ கடையில் நின்று கொண்டிருந்தபோது அனாமிகா அவரை நேரில் பார்த்துப் பிடித்துள்ளார்.

காரால் மோதி கொடூரத் தாக்குதல்

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனாமிகா, ஷாநவாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த ஷாநவாஸ், காரை வேகமாக இயக்கி அனாமிகா மீது மோதியுள்ளார். இதனால் அனாமிகா காரின் போனட் மீது விழுந்தநிலையிலும், காரை நிறுத்தாமல் ஷாநவாஸ் முன்னோக்கிச் சென்றுள்ளார். சற்று தூரத்தில் அனாமிகா காரில் இருந்து கீழே விழுந்தபோது, இரக்கமின்றி கார் சக்கரத்தை அவர் மீது ஏற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் அனாமிகாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வைரல் வீடியோ

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வீடியோவில் அனாமிகா "காரை நிறுத்து" என்று கதறியும் ஷாநவாஸ் காரை நிறுத்தாமல் ஏற்றிச் செல்வது பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட அனாமிகா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லக்னோ காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஷாநவாஸை தீவிரமாகத் தேடி கைது செய்துள்ளனர். பெயர் மற்றும் மத அடையாளத்தை மறைத்து காதலித்த விவகாரம் மற்றும் கொலை முயற்சி கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com