

டெல்லியில் திலக் நகரில் கட்டுமானத்தில் உள்ள சாலையை ஆய்வு செய்தபோது, அமைச்சர் பர்வேஷ் வர்மா இளைஞரை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பர்வேஷ் வர்மா சாலையை ஆய்வு செய்தபோது அவர் முன்னால் சிலர் கூடி, சாலையின் தரம் குறித்துப் போராட்டம் நடத்தினர். அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
அப்போது, பர்வேஷ் வர்மா அந்த இளைஞரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, பாதுகாப்பிற்காக பணியில் இருந்த காவல்துறையினர், அந்த இளைஞரையும் அவரைச் சூழ்ந்திருந்த கூட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவர் சௌரப் பரத்வாஜும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியை பகிர்ந்துள்ளார்.
அந்தக் காணொளியைப் பகிர்ந்த சௌரப் பரத்வாஜ், "பர்வேஷ் வர்மா மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலைச் செய்துள்ளார்.
டெல்லி அரசால் கட்டப்பட்ட சாலைகளின் மோசமான தரத்தை அம்பலப்படுத்தும் காணொளியை அந்த இளைஞர் படம்பிடித்துக் கொண்டிருந்தார்.
உங்களுடன் இருக்கும் பாதுகாவலர்களை அகற்றிவிட்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் உண்மையில் எவ்வளவு பலசாலி என்று பார்ப்போம். பின்னர் இந்த இளைஞனை நீங்கள் எதிர்கொள்ளலாம்." என தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பர்வேஷ் வர்மாவைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கெஜ்ரிவால் தன் எக்ஸ் பதிவில் , "சாலை கட்டுமானத்தில் நடக்கும் ஊழலைச் சுட்டிக்காட்டியதற்காக, மோடியின் அமைச்சர் ஒரு இளைஞரை பொது இடத்தில் அறைந்தார். நான் நாளை திலக் நகர் சென்று இந்தச் சாலையை ஆய்வு செய்வேன்," என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில், "அவர் (அமைச்சர்) மன்னிப்புக் கேட்டு, தேவையான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும். நாங்கள் வெறும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை; எங்களிடம் காணொளி ஆதாரம் உள்ளது. நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம்," என்றார்.