தனது தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்திய உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் இவ்வுலகை விட்டு பிரிந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது.
Yogi Adityanath
Published on: 

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி, உத்தரகண்டில் தனது 91-ஆவது வயதில் காலமானார்.

இந்த துயரச் சூழலிலும், தனது அரசு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் யோகி ஆதித்யநாத், இன்று தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு சிறிய பதிவை பகிர்ந்துள்ளார். 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள யோகி ஆதித்யநாத், "அம்மா... ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது இரங்கலை தெரிவித்ததுடன், தாயார் சாவித்ரி தேவியின் மறைவுக்கு பிறகும் பொது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டினார்.

யோகிக்கு பாராட்டு:

செய்தியாளர்களிடம் பேசிய புஷ்கர் சிங் தாமி, "முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் இவ்வுலகை விட்டு பிரிந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் இறைவனின் திருவடியில் இடம்பிடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இத்தகைய துயரமான சூழலிலும், யோகி ஜி தொடர்ந்து சமூகத்திற்கு சேவை செய்து வருவது, ஒரு மகனாக அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. இக்கட்டான இந்த நேரத்தில், அவருக்கு தேவையான மனவலிமையை இறைவன் வழங்கட்டும்" என்று கூறினார்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு அவர் தனது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"உங்கள் தாயார் திருமதி சாவித்ரி தேவி ஜி மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த ஆழ்ந்த துயரமான வேளையில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஓம் பிர்லா குறிப்பிட்டுள்ளார்.

இறுதி மரியாதை:

இன்று (வெள்ளிக்கிழமை), உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பௌரி கர்வால் பகுதியில் உள்ள தனது பூர்வீக கிராமமான பஞ்சூருக்கு வருகை தந்து, 'இகாஸ்' பண்டிகை நாளன்று காலையில் காலமான தனது தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவரது மறைவால், அந்த கிராமமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளன. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் யோகியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது தாயாரின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

X