

வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் "ஆட்சி மாற்றத்தை" ஏற்படுத்த முயல்பவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட மாட்டாது என்று உத்தரப் பிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஆட்சி மாற்றத்திற்கான கோரிக்கைகள் எழுந்ததாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இந்த விதியை அமல்படுத்தியுள்ளது.
அரசின் இந்த புதிய முடிவுக்கு எதிர்க்கட்சியான சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, உத்தரப் பிரதேச அரசின் நியமனம் மற்றும் பணியாளர் துறையின் முதன்மைச் செயலாளர் எம். தேவராஜ் இந்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார்.
வன்முறை மூலம் தற்போதைய ஆட்சி முறையை மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்ட அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கும் நபர்கள் அரசுப் பணிகளுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர்.
ஒருவர் 21 வயதை எட்டிய பிறகு, இந்த புதிய சரிபார்ப்புத் தேதிக்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள் இத்தகைய வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், அவர் இன்னும் அதில் தீவிரமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக அது எடுத்துக்கொள்ளப்படும்.
இருப்பினும், அவரது நடத்தையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு உறுதியான சான்றுகள் இருந்தால் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம்.
ஒரு விண்ணப்பதாரரின் தனிப்பட்ட அரசியல் கொள்கை அல்லது சித்தாந்தத்தின் அடிப்படையில் மட்டுமே அவரை தகுதியற்றவராக அறிவிக்க முடியாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு விண்ணப்பதாரர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது விசாரணை நிலுவையில் இருந்தாலோ அவர் தானாகவே தகுதியற்றவர் ஆகிவிட மாட்டார்.
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள், சமரசமாக முடிந்துபோன வழக்குகள் மற்றும் சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் உள்ளவர்களுக்கும் உடனடித் தடை விதிக்கப்படாது.
போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை வருவதற்குத் தாமதமானால், பணி நியமனத்தை நிறுத்தத் தேவையில்லை. விண்ணப்பதாரரின் சுயபிரகடன சான்றிதழைப் பெற்றுக்கொண்டு தற்காலிக பணி நியமனக் கடிதத்தை வழங்கலாம்.
ஆனால், பின்னர் வரும் சரிபார்ப்பில் தவறான தகவல் கொடுத்தது தெரியவந்தால், வேலை உடனடியாக ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட காவல்துறையும், உள்ளூர் உளவுத்துறையும் சரிபார்ப்பு கோரிக்கை வந்த 30 நாட்களுக்குள் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்காக போலீசார் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு நேரில் செல்லவோ அல்லது விண்ணப்பதாரர் நேரில் வர வேண்டும் என்றோ கட்டாயமில்லை.
ஏற்கனவே அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கு இந்த புதிய சரிபார்ப்பு தேவையில்லை.
உத்தரப் பிரதேச அரசின் இந்த புதிய உத்தரவு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை நினைவுபடுத்துவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
இதுகுறித்து பேசிய சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் உதய்பீர் கூறுகையில், "சுதந்திர இந்தியாவில் போராட்டம் நடத்துவது என்பது அரசியல் சாசன ரீதியாக வழங்கப்பட்ட உரிமை. தேர்தல் மூலம் சட்டப்பூர்வமாக ஆட்சி மாற்றம் நடக்கும். ஆனால், தற்போதைய பா.ஜ.க அரசு மக்களை அச்சுறுத்தும் மனப்போக்குடன் செயல்படுகிறது. பிரிட்டிஷ் காலத்து சட்டங்களை யோகி அரசு கொண்டு வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், "அரசாங்கமே இங்கு நீதிபதியைப் போல நடந்துகொள்கிறது. இதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் இல்லையா? தற்போதைய இளைஞர்களின் போராட்டத்தைக் கண்டு இந்த அரசு பயந்துபோய் உள்ளதையே இது காட்டுகிறது" என்று விமர்சித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கான போராட்டங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு கூறினாலும், இது ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.