

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் நிலம் ஒன்றில் கிரேன் ஒன்று உயர்த்தப்பட்ட நிலையில் காணப்பட்டதால், பாதுகாப்பு அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அங்கு தரையிறங்கவிருந்த இரண்டு விமானங்கள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வானிலேயே வட்டமடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
விமான நிலைய வட்டாரங்கள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், இன்று (செவ்வாய் கிழமை) மாலை 4 மணியளவில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் நிலத்தில் பழுதுபார்ப்பு பணிக்காக உயர்த்தப்பட்டிருந்த கிரேன் ஒன்றை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை (ATC) கண்டறிந்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறின.
இதனை தொடர்ந்து, அந்த கிரேனை கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இந்த அபாயகரமான சூழலை சரிசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ-யிடம் கூறுகையில், பழுதுபார்ப்பு பணிக்காக கொண்டுவரப்பட்ட கிரேன், தொழில்நுட்ப கோளாறு காரணமாக உயர்த்தப்பட்ட நிலையிலேயே சிக்கிக்கொண்டதாக தெரிவித்தார்.
பின்னர், அந்த கிரேன் மற்றும் அது பொருத்தப்பட்டிருந்த வாகனம் ஆகியவற்றை அகற்றி, தடையை நீக்கியதன் மூலம் விமான போக்குவரத்து மீண்டும் சீரானது. இந்த சம்பவம் தொடர்பாக பூந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.