திருப்பதியில் நவீன அருங்காட்சியகம் திறப்பு: இன்று முதல் பக்தர்கள் பார்வையிடலாம்!

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்த அருங்காட்சியகம் இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது
Tirupati Museum
Published on: 
Summary

திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களைக் கவரும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட SV அருங்காட்சியகம் இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் பங்களிப்புடன் பிரம்மாண்ட உருவாக்கம்

திருமலை மலையில் சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் இந்த அருங்காட்சியகம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 14 தனித்துவமான பிரம்மாண்ட காட்சியரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 8,000-க்கும் மேற்பட்ட பழங்காலக் கலைப்பொருட்கள், வரலாற்றுச் சின்னங்கள், அரிய சிற்பங்கள் மற்றும் பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய ஈர்ப்பான 'பிரம்மாண்டம் அரங்கம்'

ஒவ்வொரு அரங்கமும் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் திவ்யத் திருவுருவம், திருமலை ஆலய வரலாறு, இந்தியச் சிற்பக்கலை, கோயில் கட்டடக்கலை, பழங்கால ஆயுதங்கள், இசை மற்றும் நடனம் போன்ற தனித்துவமான கருப்பொருள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய ஈர்ப்பாக ‘பிரம்மாண்டம் அரங்கம்’ விளங்குகிறது. நவீன தொழில்நுட்பங்களான ஹாலோகிராபிக் காட்சிகள் , 360 டிகிரி ஒலி அனுபவம் மற்றும் டிஜிட்டல் காட்சியமைப்புகள் மூலம் பிரபஞ்சம், படைப்பின் ரகசியங்கள், அண்டத்தின் விரிவாக்கம் போன்ற அரிய விஷயங்கள் பக்தர்களுக்கு நேரடிக் காட்சி அனுபவமாக வழங்கப்படுகின்றன.

நேரக் கட்டுப்பாடு மற்றும் கட்டண விவரங்கள்

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இதற்கான நுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ. 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை இதைப் பார்வையிடலாம் என்றும், இதற்கான நுழைவுச்சீட்டுகள் மாலை 04:00 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தி, வரலாறு, கலை, பண்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் சங்கமமாகத் திகழும் இந்த எஸ்.வி. அருங்காட்சியகம், திருமலைக்கு வரும் ஆன்மீகப் பயணிகளுக்கு ஒரு புதிய மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

X