திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற ‘திருப்பதி லட்டு’ பிரசாதத்தில் நூல் இருந்ததாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் உண்மைக்கு மாறானது என திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.
மேலும், இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாங்கப்பட்ட லட்டு ஒன்றில் நூல் போன்ற பொருள் இருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவஸ்தான அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், திருப்பதி தேவஸ்தானத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் லட்டு பிரசாதம் குறித்து பக்தர்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கும் விதமாக வீடியோ ஒன்றை உருவாக்கி அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது சரியல்ல.
பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய போலியான மற்றும் சரிபார்க்கப்படாத வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏதேனும் குறைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அதைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்த்து, உடனடியாக தேவஸ்தான கண்காணிப்புத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மட்டுமே பக்தர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.