

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கும்படி, ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூபாய் 10 கோடி நன்கொடையாக வழங்கினார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருமலையில் உள்ள வெங்கடாதிரி மலையின் உச்சியில் திருப்பதி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் விஷ்ணுவின் ஒரு வடிவமான வெங்கடேச பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித தளமாக உள்ளது.
இந்த கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர்.
திருமலை கோவிலில் ஒவ்வொரு மாதமும், ரூபாய் 100 கோடி முதல் 130 கோடி வரை ரொக்க நன்கொடையும், சுமார் 100 முதல் 120 கிலோ வரையில் தங்கமும் நன்கொடையாக அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 1200 கோடி முதல் 1600 கோடி வரை வசூல் ஆகி வருகிறது. அதே சமயம் தங்க நன்கொடைகள் ஆண்டுக்கு சராசரியாக 1000 முதல் 1400 கிலோ வரை கிடைக்கின்றது.
இந்த நிலையில் ஐதரபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் கோடாலி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ரூபாய் 10 கோடி நன்கொடையை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா செளதரியிடம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கினார்.
மேலும் இந்த நன்கொடையை மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக பயன்படுத்துமாறு அவர் கூறினார்.
திருமலையில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் அன்னபிரசாத சேவையை தொடங்கி திருப்பதி திருமலை தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது.
இந்த இலையில், இந்த நன்கொடையானது சமீபத்தில் வழங்கப்பட்ட தனிப்பட்ட நன்கொடைகளில் இரண்டாவது மிகப்பெரிய நன்கொடையாக அமைந்தது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், பெயர் வெளியிட விரும்பாத வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர், ரூபாய் 140 கோடி மதிப்புள்ள 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கியிருந்தார்.