

கடந்தாண்டு இந்தியாவையே உலுக்கிய உத்தரப்பிரதேச ‘ப்ளூ டிரம்’ வழக்கில், சௌரப் ராஜ்புத்தின் மனைவி மற்றும் கள்ளகாதலனுக்கு மரண தண்டனை வழங்கி மீரட் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் போது, மகாபாரதத்தை மேற்கோள்காட்டி தீர்ப்பளித்த நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா, தண்டனையும் ஒரு வகையான தர்மமே என்று குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பு வழங்கப்படும்போது கொலையுண்ட சௌரப் ராஜ்புத்தின் தாயும், சகோதரரும் நீதிமன்றத்தில் இருந்தனர். தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்ற அறையில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த பல வழக்கறிஞர்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீர்ப்புக்கு பின் பேசிய சௌரப்பின் தாய்.,
“நீங்கள் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால், பிரிந்து செல்லுங்கள், ஆனால் யாருடைய குழந்தையையும் கொல்லாதீர்கள். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் குழந்தை (சௌரப் ராஜ்புத்) எங்கும் செல்லவில்லை. அவனது நினைவுகள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளன.” என கண்ணீர்மல்க தெரிவித்தார்.
முன்னதாக முஸ்கானின் பெற்றோர், தங்கள் மகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதை எதிர்க்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த வணிக கடற்படை அதிகாரியான சௌரப் ராஜ்புத்தை (29) அவரது மனைவி முஸ்கானும், மனைவியின் கள்ளக்காதலன் சாஹிலும் இணைந்து கொடூரமான முறையில் கொலை செய்தனர்.
கொலைக்கு பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, உறுப்புகளை நீல நிற ட்ரம் ஒன்றில் போட்டு, அதனை சிமெண்ட் கலவை ஊற்றியும் மூடினர்.
ராஜ்புத்தின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என புகாரளிக்க இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது இந்த வழக்கு இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றபோது வழக்கறிஞர்கள் சேர்ந்து இருவரையும் சராமாரியாக தாக்கிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின.
கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த கொலை வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து கிட்டத்தட்ட 13 மாதங்களில் 126 விசாரணைகள் நடைபெற்றன. 22க்கும் மேற்பட்டோர் சாட்சிக் கூறினர்.
காவல்துறை சுமார் 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இறுதி வாதம் செப்.17ம் தேதியோடு நிறைவடைந்தது. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செப்.30ம் தேதி இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இருவருக்கும் மரண தண்டனை விதித்து மீரட் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சட்டப்படி இந்த மரண தண்டனையை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.