

மணிப்பூரில் ஒரே நாளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் தமேங்லாங் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குக்கி சமூகத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று காலை 5:30 மணியளவில் கைமாய் காவல் எல்லைக்குட்பட்ட டோலன் கிராமத்தில் ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் லிங்ஜங் சிங்சிட் (46) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் சேனே சிங்சிட் மற்றும் அவர்களின் 6 வயது மகன் ஆகியோர் குண்டடிபட்டு பலத்த காயமடைந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள 6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பிற்பகல் 3 மணியளவில் நுங்பா காவல் எல்லைக்குட்பட்ட லாங்பி கிராமத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.
இத்தாக்குதலில் ஜிலி சிங்சன் மற்றும் ரியோல் கங்டே என இருவர் கொல்லப்பட்டதாக 'வெஸ்டர்ன் வில்லேஜ் வாலண்டியர்' என்ற குக்கி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் நாகா கிளர்ச்சி அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
காவல் நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமத்திற்குச் செல்லும் சாலைகள் மோசமாக இருந்ததால், காவல்துறையினரால் நேற்று சம்பவ இடத்தை உடனடியாக அடைய முடியவில்லை. எனவே இன்று ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1990களின் நாகா-குக்கி மோதலின் போது உயிரிழந்த 1,000 க்கும் மேற்பட்டவர்களின் நினைவாகக் குக்கி சமூகத்தினர் நேற்று (செப்டம்பர் 13ஆம் தேதியை) 'கருப்பு தினமாக' அனுசரித்தபோது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.