உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக வேகமாக ஓடும் ஆற்று வாய்க்காலில் குதித்த ஒரு பெண்ணை, இரண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவர்களின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தச் சம்பவம் நிச்லால் பகுதியில் உள்ள நாராயணி ஆற்றின் தியோரியா கிளை வாய்க்கால் பாலத்தில் நடைபெற்றுள்ளது.
நேரடி சாட்சியங்களின்படி, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அந்தப் பெண் தனது மொபைல் போனை சாலையில் தூக்கி வீசிவிட்டு, வேகமாக வாய்க்காலை நோக்கி ஓடியுள்ளார்.
குடும்பத்தினர் சுதாரிப்பதற்குள், அவர் பாலத்திலிருந்து வாய்க்காலில் குதித்துவிட்டார்.
ஆற்றின் நீர்வரத்து மிக வேகமாக இருந்ததால், அந்தப் பெண் நொடிப் பொழுதில் நீரோட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அலறியடித்தனர்.
பலர் பாலத்தின் அருகில் திரண்ட போதிலும், நீரோட்டம் மிகவும் உக்கிரமாக இருந்ததால் ஆற்றில் இறங்கி அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
அந்த இக்கட்டான சூழ்நிலையில், 'மசிஹ் சேவாஷ்ரம் இன்டர் காலேஜ்' பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர்களான கிருஷ்ணா குப்தா மற்றும் சதாம் உசேன் இருவரும் உடனடியாக வாய்க்காலில் குதித்தனர்.
வேகமாகப் பாய்ந்த நீரோட்டத்துடன் கடுமையாகப் போராடி நீந்திய அந்த இரு சிறுவர்களும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கி, அவர் நீரில் மூழ்காதவாறு பிடித்துக்கொண்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணை பத்திரமாக ஆற்றின் கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது கரையில் இருந்த பொதுமக்களும் கைகோர்த்து அந்தப் பெண்ணை மேலே தூக்க உதவினர்.
மாணவர்கள் அந்தப் பெண்ணை மீட்பதை அங்கிருந்த ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, மாணவர்களின் புத்திக்கும் வீரத்திற்கும் நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மாணவர்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டி, மகாராஜ்கஞ்ச் எஸ்பி சக்தி மோகன் அவஸ்தி இரு மாணவர்களையும் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
மேலும், பள்ளி முதல்வர் ஃபாதர் பிரவீன் புலிந்தநாதனும் தங்களது பள்ளி சார்பில் மாணவர்களுக்குச் சிறப்புப் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண் தற்கொலை முயற்சி எடுத்ததற்கான குடும்பக் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.