ஞானேஷ் குமாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லுங்கள்: டிரம்ப் பாராட்டிய நிலையில் காங்கிரஸ் பதிலடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டிய நிலையில், காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
டொனால்டு டிரம்ப்- பவன் கெர்ரா
டொனால்டு டிரம்ப்- பவன் கெர்ரா
Published on

இந்திய தேர்தல் ஆணையத்தையும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெகுவாக பாராட்டியிருந்தார்.

டொனால்டு டிரம்ப் பாராட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பவன் கெர்ரா அதற்கு பதில் கொடுத்துள்ளார்.

பவன் கெர்ரா

பவன் கெர்ரா "அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞானேஷ் குமாரை அழைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் வாக்கு இயந்திரங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பவன் கெர்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்புள்ள டொனால்டு டிரம்ப் அவர்களே, தயவு செய்து ஞானேஷ் குமாரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள். அவரையே அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கிடைக்கும் விமானத்தில் எங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் (EVMs) நாங்கள் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கு இழைத்த அவமானங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக, நாங்கள் உங்களுக்குச் செய்யக்கூடிய மிகச்சிறிய கைமாறு இதுவே. அன்புடன் இந்தியா.

இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப்

முன்னதாக டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் "இந்த மாத தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமார் எங்கள் நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அது செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும்? என்பதுதான்.

இந்தியாவின் கடந்த தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்தனர். அதேவேளையில், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தை கொண்டிருப்பது கட்டாயமாக இருந்தது. நாம் அமெரிக்காவை காக்கும் சட்டத்தை (The Save America Act) இப்போதே நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, கூட்டாட்சி தேர்தல்களை தீர்மானிப்பதில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

கூட்டாட்சி தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வதற்கு முன்பு, வாக்காளர்கள் தங்கள் குடியுரிமைக்கான ஆதாரத்துடன், செல்லுபடியாகும் அடையாள அட்டையையும் வழங்க வேண்டும். அமெரிக்க தேர்தல்களை அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என Save சட்ட முன்மொழிவு வலியுறுத்துகிறது.

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

இந்திய தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது, சேர்த்தது தொடர்பாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என காங்கிரஸ் விமர்சனம் செய்தது. அத்துடன் SIR மூலம் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com