சிவசேனாவில் இருந்து கட்சித் தாவிய 6 எம்.பி.க்கள் - மக்களவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

எம்.பி.க்கள் இணைவிற்கு ஒப்புதல் அளித்த சபாநாயகரின் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
SC notice to Lok Sabha Speaker over approval of 6 MPs
Published on

மகாராஸ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் ஆறு எம்.பி.க்கள் இணைந்ததை அங்கீகரித்த மக்களவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

மகாராஸ்டிராவில் சமீபத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் எம்.பி.க்களான சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், நாகேஷ் பாட்டீல், ஓம்பிரகாஷ் ராஜேனிம்பல்கர் மற்றும் பெளசாஹேப் வக்செளரே ஆகிய ஆறு பேர் இணைந்தனர்.

கட்சித் தாவிய சிவசேனா எம்பிக்கள்:

இந்த இணைப்பிற்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மக்களவை பலம், மூன்று எம்.பி.க்களாக குறைந்தது.

அதேவேளையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 13 எம்.பி.க்களாக அதிகரித்தது.

இதன்மூலம், பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது பெரிய அங்கமாக சிவசேனா மாறியது.

இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளின் வளர்ச்சியை பாதுகாப்பதற்காகவே எனது கட்சியில் இணைந்துள்ளனர். மற்றபடி தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்ல” என்று கூறினார்.

சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்:

இந்நிலையில் எம்.பி.க்களின் இணைவிற்கு ஒப்புதல் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட சபாநாயகரின் முடிவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த கண்பத் சாவந்த் மனு தாக்கல் செய்தார்.

இதை அவசர வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்துமாறும், நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை செயலாளர் மற்றும் ஆறு எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com