தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கறிஞர்: உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஜாய்மால்யா பாக்ஜி மற்றும் மோகனா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
Justice Surya Kant
Published on: 
Summary

உச்ச நீதிமன்ற அரங்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்தின் நேர்மையைச் சந்தேகத்திற்கு உள்ளாகும் வகையில் பேசிய வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற அரங்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்தின் நேர்மையைச் சந்தேகத்திற்கு உள்ளாகும் வகையில் பேசிய வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முறையீட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், வழக்கறிஞர் தனது பதிலைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை வரும் 2027 ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஜி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபணிகளைத் தொடங்கிய போது இந்தச் சம்பவம் அரங்கேறியது. நீதித்துறையில் ஊழல் புகார்கள் உள்ளதாகக் கூறி அந்த வழக்கறிஞர் அவசர வழக்காக இதனை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தான் அனுப்பிய கடிதத்திற்குத் தலைமை நீதிபதி அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். உடனே குறுக்கிட்ட நீதிபதி மோகனா, இதுபோன்று அவசரமாக எதையும் முன்வைக்க முடியாது என்று எச்சரித்தார்.

இருப்பினும் தொடர்ந்து வாதாட முயன்ற அந்த வழக்கறிஞரிடம், "நாங்கள் பார்க்கிறோம், நீங்கள் சற்று காத்திருங்கள்" என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த வழக்கறிஞர், நீதிமன்றத்தின் மாண்பையும் தலைமை நீதிபதியின் அதிகாரத்தையும் அவமதிக்கும் வகையில் ஆக்ரோஷமாகப் பேசத் தொடங்கினார். "இல்லை, நான் காத்திருக்க மாட்டேன். நீங்கள் அந்த நாற்காலியில் உட்கார முடியாது. அதற்குரிய தகுதி உங்களுக்கு இல்லை. அதற்கான நேர்மை உங்களிடம் இல்லை" என்று அவர் நீதிமன்றத்தினுள் உரக்கக் கூறினார். இதனைக் தொடர்ந்து அவர் உடனடியாக நீதிமன்றக் காவலர்களால் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் பிரதீப் ராய் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கடுமையான அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர். அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஜாய்மால்யா பாக்ஜி மற்றும் மோகனா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையிலோ அல்லது நீதி பரிபாலனத்திற்குத் தடையாக இருக்கும் வகையிலோ செயல்படும் நபர்கள் மீது கிரிமினல் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. இதன் அடிப்படையில், அட்டர்னி ஜெனரலின் 15(1)(b) பிரிவின் கீழ் ஒப்புதல் பெறப்பட்டு, இந்த வழக்கில் முதற்கட்ட முகாந்திரம் இருப்பதாகத் திருப்தி அடைந்த நீதிபதிகள், எதிர்வரும் ஜனவரி 20-க்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

X