மத்தியபிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: காரீஃப் பயிர் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம்!

இந்த தடையால் உரம் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
Madhya Pradesh
Published on: 

மத்திய பிரதேச மாநிலத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களின் விற்பனைக்கு அம்மாநில அரசு திடீரென இடைக்காலத் தடை விதித்துள்ளது. காரீஃப் சாகுபடி பருவம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் இந்த அதிரடி முடிவால் சுமார் 82 லட்சம் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பு விவரங்களை சரிபார்க்க நடவடிக்கை

மத்திய அரசின் iFMS (Integrated Fertilizer Management System) இணையதளத்தில் பதிவாகியுள்ள உரங்களின் அளவிற்கும், விற்பனையாளர்களிடம் உள்ள உண்மையான உரக் கையிருப்புக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைச் சரிபார்ப்பதற்காகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 14-ஆம் தேதி மாலை 7 மணி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவு, மாநில மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், எம்பி அக்ரோ மையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து விநியோக மையங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கொந்தளிப்பு

நெல், பருப்பு உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கு உரம் இட வேண்டிய இந்த முக்கியமான காலகட்டத்தில் உர விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், பயிர் மகசூல் பெருமளவில் குறையும் என விவசாயிகள் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. மேலும், இந்த தடையால் உரம் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, உடனடியாக உர விநியோகத்தை சீரமைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளது.

அரசு அளித்துள்ள விளக்கம்

இருப்பினும், விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், மாநிலத்தில் போதிய அளவு உர இருப்பு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்புச் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும், நாளை முதல் (ஆகஸ்ட் 17) முதல் உர விற்பனை மீண்டும் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும் வேளாண் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com