

லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையம் தகவல்படி, இன்று காலை 8:25 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது.
இது பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் லே பகுதியில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.
இன்று, லடாக் நிலநடுக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதிகாலை 3:40 மணியளவில், இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானது.
பூமிக்கு அடியில் 8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பிற்பகல் 3:34 மணியளவில் லடாக்கில் லே பகுதியில் இதைவிடச் சற்று வலுவான நிலநடுக்கம் பதிவானது.
இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 150 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருள் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக நேற்று ஜப்பானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் அதிகாலையில் 5.9 ரிக்டர் அளவில் பதிவானது. தொடர்ந்து பிற்பகலில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரண்டு நிலநடுக்கங்களையும் சேர்ந்து 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது குறிப்பிடத்தக்கது.