

SIR நடவடிக்கையில் முறைகேடு நடைபெற்று கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தது. இதனால் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி இளைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளது.
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே, மேற்கு வங்கம் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளம் மாநிலம் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், டெல்லி மாநில முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், போராட்டத்திற்கு எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு போராட்டத்திற்கு எதிராக கருத்து பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில் "வெளிநாட்டு ஆதரவுடனும் நிதியுதவியுடனும் நாட்டை சீர்குலைக்க முயலும் சதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் ஒன்றுபட வேண்டும். தொழில்நுட்பம் நமக்கு எதிராக போராயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த போரை எதிர்கொள்ள நாம் புதிய தொழில் நுட்பங்களையும் பொறியியல் தீர்வுகளையும் உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.