

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களையும் போராட்டக்காரர்களையும் காவல்துறை கைது செய்ததை பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிராக சிஜேபி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் டெல்லியில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொள்ள கிளம்பிய மம்தா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் போன்ற முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி வந்திறங்கிய சி.ஜே.பி. தலைவர்களான அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.
நேற்றைய போராட்டத்தில் சுமார் 7000 போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் எக்ஸில் பிரகாஷ் ராஜ் பகிர்ந்த காணொளியில், குடிமக்களின் போராட்டங்களிலிருந்து இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் தப்பி ஓடுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
"இந்தக் கூச்சல் என்ன? விமானங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் இளைஞர்களை கைது செய்கிறீர்களா? அவர்களைப் போராட்டத் தளத்திற்குச் செல்லக்கூட அனுமதிக்கவில்லையா?
நீங்கள் எங்கள் குரல்களை அடக்கவில்லை, உங்களையே கைது செய்துகொண்டீர்கள். சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தை வீழ்த்த உங்களை அனுமதிக்க முடியாது.
இது ஒரு நீண்ட போராட்டம், நாங்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருப்போம்... ஆட்டம் இப்போதுதான் தொடங்குகிறது..." என்று அவர் அந்தக் காணொளியில் எச்சரித்தார்.