

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் எடுக்கப்படும் என தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஜக்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.
காதல், திருமணம், அரசியல் என தனது வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தில் சோனியா காந்தி பகிர்ந்துள்ள நிலையில், அதனை தழுவி தெலுங்கில் இப்படம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.
சங்காரெட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சங்காரெட்டி தொகுதியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் முன்வந்து திரைப்படத் தயாரிப்பிற்குப் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கட்சித் தலைவர்களுக்கு நிதி திரட்டுமாறு அழைப்பு விடுத்த அவர், தொண்டர்களிடம், “நீங்கள் தேர்தல்களுக்குச் செலவு செய்கிறீர்கள், அல்லவா? இதையும் அதுபோன்ற ஒரு செலவாகக் கருதுங்கள். நாம் நிதி திரட்டி ஒரு நல்ல இயக்குநரைத் தேர்ந்தெடுப்போம்” என்று கூறினார்.
உடனே தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜூலகந்தி ஆஞ்சநேயுலு படத்தின் தயாரிப்புக்கு ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்தார்.
படத்திற்கான ஏற்பாடுகள் முடிந்தவுடன், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பொம்மா மகேஷ் குமார் கௌட் ஆகியோர் படப்பிடிப்பை தொடங்கிவைப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.