

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகத்தை இந்தியாவில் வெளியிடும் உரிமத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
முதலில் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் வெளியிட இருந்தநிலையில் பின் விலகியது. இந்நிலையில் ஹார்பர் காலின்ஸ் உரிமத்தை பெற்றுள்ளது.
புத்தகத்தின் சில பகுதிகளில் “எழுத்துப்பூர்வ மாற்றங்கள் மற்றும் நீக்கங்களை” மேற்கொள்ளுமாறு பென்குயின் இந்தியா நிறுவனம் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்த சோனியாவின் பகிர்வுகளை நீக்க பென்குயின் இந்தியா கேட்டுள்ளது. இதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவிக்க இந்த ஒப்பந்தத்திலிருந்து பென்குயின் இந்தியா விலகியதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு பென்குயின் இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்து, இது உண்மைக்கு மாறான தகவல் என தெரிவித்தது.
பென்குயின் நிறுவனம் விலகியதைத் தொடர்ந்து, ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இப்புத்தகம் 2026 நவம்பர் 10 அன்று இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதக்கத்தில் சோனியா காந்தி தனது சிறுவயது வாழ்க்கை, ராஜீவ் காந்தி உடனான திருமண வாழ்க்கை, அதன் பின்னராக அரசியல் வருகை உள்ளிட்ட தனது வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை பகிர்ந்துள்ளார்.