

பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த 3 ஆம் கட்டம் நாடு முழுவதிலும் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.
இதில் பல குளறுபடிகள் பதிவாகி வரும் நிலையில் சாமானியர்கள் மட்டுமின்றி, நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் , நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' பெற்ற மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பெயரில் பிழை இருப்பதாகக் கூறி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக வெளியான செய்தி விவாதத்தை கிளப்பியுள்ளது.
பழைய வாக்காளர் பதிவேட்டில் இவரது பெயர் 'Prof CNR Rao' என்று பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய புதிய கணினி அமைப்பில் ஆங்கிலத்தில் கூடுதல் 'f' சேர்க்கப்பட்டு 'Proff CNR Rao' எனத் தவறாகப் பதிவாகியுள்ளது.
கணினி அமைப்பில் உள்ள இந்த பெயர் முரண்பாடு காரணமாக, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவருக்கு ஆன்லைனில் நோட்டீஸ் அனுப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த நோட்டீஸும் நேரில் வந்து சேரவில்லை என்று சி.என்.ஆர். ராவின் அலுவலகம் தெரிவித்தது.
சர்ச்சையை தொடர்ந்து விளக்கமளித்த தேர்தல் ஆணையம், 92 வயதான விஞ்ஞானியின் மூப்பையும் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு அவருக்கு நேரில் ஆஜராகும் நோட்டீஸ் எதுவுமே அனுப்பப்படவில்லை என்றும், தேர்தல் அதிகாரிகளே நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று விவரங்களை சரிசெய்து இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை தொடர நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், நடிகர் பிரகாஷ் ராஜ், ராம் ஜெத்மலானி, ராகவ் சதா உள்ளிட்டோரும் இதுபோன்ற சிக்கலை சந்தித்துள்ளனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த மே 14 அன்று இந்திய தேர்தல் ஆணையம் 3 ஆம் கட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தைஅறிவித்தது.
மே 30 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் இந்தப் நடவடிக்கையின் மூலம் சுமார் 36.73 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டும், எஞ்சிய 13 மாநிலங்களில் 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
முன்னதாக, முதல் மற்றும் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரை சேர்ந்த சி.என்.ஆர். ராவ், நாட்டின் முன்னணி வேதியியல் விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவார்.
1976இல் இந்திய அறிவியல் கழகத்தில் (IISc), 'Solid state and Structural chemistry' பிரிவை நிறுவிய இவர், 1984 முதல் 1994 வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார்.
1,600க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவருக்கு, நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவரை போன்றோரே எஸ்ஐஆர் பணியின்கீழ் சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில் சாமானிய மக்கள் இப்பணியால் அதிக சிரமங்களை சந்திக்க நேர்ந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.