

டெல்லியில் உள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் வீட்டு முன் (வெளியே) இன்று ஏராளமான சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் பல சீக்கிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சி தலைவர் சஜ்ஜன் குமார் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். இவர் கடந்த வியாழக்கிழமை காலமானார். இவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹீரோ மற்றும் ரோல் மாடல் எனக் கூறியுள்ளனர்.
இது சீக்கியரகளுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சஜ்ஜன் குமாரை ஹீரோ மற்றும் ரோல் மாடல் என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுத்தினர்.
இது தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள சீக்கிய குர்த்வாரா நிர்வாக கமிட்டி (DSGMC) தலைவர் ஹர்மீத சிங் கல்கா, பொதுச் செயலாளர் ஜெகதீப் சிங் கலோன் ஆகியோர் தலைமையில் ஏராளமானவர்கள் ராகுல் காந்தி வீட்டை நோக்கி சென்றனர். இதனால் சுனேரி பாக் சாலையில் உள்ள ராகுல் காந்தி வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாதவாறு தடுத்து நிறுத்த தயார் நிலையில் இருந்தனர்.
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட குமாரை, காங்கிரஸ் கட்சி ஒரு நாயகனாக கருதுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று DSGMC-யின் தலைவர் தெரிவித்தார்.
மேலும், சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை. சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும் எனறார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.