

பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மக்களவை வருகிற 30-ந்தேதியும், மேல்சபை டிசம்பர் 2-ந்தேதியும் மீண்டும் கூடுகின்றன.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாத நிலையில் முக்கிய அரசு அலுவல்களுக்காக இந்த 4 நாள் சிறப்பு அமர்வு நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தியா கூட்டணியில் உள்ள சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட இருப்பதாகவும் இந்த தகவல் தெரிவிக்கிறது. சுப்ரியா சுலே கூறும்போது, ‘இந்த மசோதா குறித்து விவாதிக்கவும் தேவைப்பட்டால் ஆதரவு அளிக்கவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு ஈடாக மத்திய மாநில அரசுகளின் அதிகாரப்பகிர்வை சரத்பவார் கட்சி கேட்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இரு கட்சிகள் இடையே தீவிரமாக திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மத்திய மந்திரி சபையில் சரத்பவார் கட்சி 2 இடங்களை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி சுப்ரியா சுலே மத்திய மந்திரி ஆகலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. மேலும் மராட்டிய மந்திரி சபையில் 2 இடங்களையும் அந்த கட்சி கேட்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக சரத்பவார் தங்களது நிலைப்பாட்டை காங்கிரசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தங்களது கட்சி ஒற்றுமையாக இருக்க இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிப்பது அவசியம் என்று அவர் நெருங்கிய கூட்டணி கட்சியான காங்கிரசிடம் கூறி உள்ளார். சரத்பவார் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 8 எம்.பி.க்கள் உள்ளனர்.