பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில் விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய அமைச்சகம் அவசர கூட்டம்

சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.
டெல்லி
டெல்லி
Published on
Summary

டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே 3 இத்தாலியர்கள் ஜெர்மனியின் முனிச் நகருக்கு விமானத்தில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை இத்தாலியை சேர்ந்த 3 பேர் அமிர்தசரசில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தனர்.

அந்த விமானம் அதிகாலை 12.50 மணியளவில் டெல்லி வந்தடைந்தது. அதன்பின்னர் அதிகாலை 1.45 மணியளவில் டெல்லியில் இருந்து லுப்தான்சா விமானத்தில் முனிச் நகருக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்கள் கட்டாய குடிவரவு சோதனைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.

3 இத்தாலியர்களுக்கும் அமிர்தசரசிலேயே டெல்லியில் இருந்து முனிச் செல்லும் லுப்தான்சா விமானத்துக்கான பயணச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி வந்தபோது சர்வதேச பயணிகள் என்று அடையாளம் கண்டு, அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் சர்வதேச பயணிகள் செல்லும் மாற்றுப்பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் குடியேற்ற சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் சர்வதேச புறப்பாடு பகுதிக்கு சென்று முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர். பதிவேடு சரிபார்ப்பின்போது இந்த குளறுபடி தெரியவந்துள்ளது.

அரசு நடவடிக்கை

இச்சம்பவத்தில் ஏர் இந்தியாவின் அலட்சியத்தைக் சுட்டிக்காட்டி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் செப்டம்பர் 12 அன்று அந்நிறுவனத்திடம் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் அவசர கூட்டமும் இதுதொடர்பாக நாளை மாலை கூட்டப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகச் செயலாளர், உளவுத்துறை இயக்குநர், குடிவரவுப் பணியகக் ஆணையர், ஏர் இந்தியா தலைவர் மற்றும் டெல்லி விமான நிலைய சி.இ.ஓ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com