டெல்லி 5 நட்சத்திர விடுதி அறையில் ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்

விமானியின் சகோதரர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.
 ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்
ஏர் இந்தியா விமானி மர்ம மரணம்
Published on

டெல்லியில் ஏர் இந்தியா விமானி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி, பின்னர் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மாறிய அந்த விமானி, போயிங் 787 விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிக்காகப் டெல்லிக்கு வந்துள்ளார்.

அவர் செப்டம்பர் 10 அன்று தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

உயிரிழப்பு

செப்டம்பர் 11 மாலை நேரத்தில், விமானியின் சகோதரர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர் ஓட்டல் மேலாளரை தொடர்புகொண்டு நிலைமையை கூறியுள்ளார்.

ஓட்டல் அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், மேலாளர் மாற்றுச் சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது, விமானி சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.

வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பிரேதப் பரிசோதனை

அவரது உடலுக்கு இன்று புதுடெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் டற்கூறாய்வு செய்யப்பட்டது. இறுதி மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியும் எனக் காவல் துறை கூறியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான சதிச்செயலும் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கூறிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அந்த விமானி மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் ஓட்டல் அறையில் எங்களது விமானி சுயநினைவின்றி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி எங்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா வழங்கி வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com