உலகமே பாகிஸ்தானுடன் நின்றபோது இந்தியாவுடன் நின்ற ரஷியா.. தனிமைப்பட்ட அமெரிக்கா - ஜெய்சங்கர்

உலகின் உற்பத்தித் துறையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சீனாவின் பங்களிப்பாகும்.
ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்
Published on: 
Summary

அமெரிக்கா மற்றும் ரஷியா குறித்து டெல்லியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

டெல்லியில் இன்று தொடங்கி நாளை வரை முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்துகொண்டார். மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜெய்சங்கர்,

இந்தியாவுடன் ரஷியா

'இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்டவை அச்சுறுத்தலுக்கு ஆளானபோதெல்லாம் ரஷ்யா தான் எங்களுடன் உறுதியாக நின்றது. எங்களின் இரு நாடுகளும் வரலாற்று ரீதியாக நல்லுறவை வைத்துள்ளன. அந்த உறவு தான் இன்று எங்களை நட்பாக வடிவமைத்துள்ளது.

உலகின் பெரும்பகுதி பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியை ஆதரித்த காலகட்டத்தில் ரஷியா எங்களுடன் நின்றது.

1971ல் பாகிஸ்தானுடனான போரின்போது சோவியத் யூனியன் (தற்போதைய ரஷியா) இந்தியாவிற்கு ஆதரவாக இருந்தது.

இந்த உறவு ராணுவம் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் வளங்கள் சார்ந்த துறைகளும் இருநாடுகள் இடையேயான உறவில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

உக்ரைன் போரை பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மற்றும் தூதரகம் ரீதியிலான நடவடிக்கை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது." என தெரிவித்தார்.

அமெரிக்காவின் தனிமை

தற்போதைய அமெரிக்காவின் அணுகுமுரை குறித்து பேசிய ஜெய்சங்கர், "தற்போதைய உலகச் சூழலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, அமெரிக்காவின் நிலைப்பாடே வேகமாக மாறிவருவதுதான்.

வாஷிங்டன் இப்போது முன்னெப்போதையும் விட மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "சீனாவின் எழுச்சி சர்வதேச அமைப்பில் செல்வாக்கு செலுத்தும் மற்றொரு முக்கிய காரணியாக மாறியுள்ளது.

உலகின் உற்பத்தித் துறையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சீனாவின் பங்களிப்பாகும். அதன் பொருளாதார சக்தி தற்போது அரசியல் செல்வாக்காக மாறி வருகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியின் தாக்கம் அந்த இரு நாடுகளுக்குள் மட்டும் நின்றுவிடவில்லை.

பல சார்பு நிலை

வளர்ந்து வரும் பொருளாதாரங்களும் தங்களின் சொந்த நலன்கள் குறித்து அதிக விழிப்புணர்வு பெற்று வருகின்றன.

இந்தியாவில் பிரபலமாக உள்ள 'தற்சார்பு' என்ற சொல்லைக் குறிப்பிட்ட அவர், பல நாடுகள் இப்போது தங்களின் சொந்தத் திறன்களுக்கும் நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்கின்றன" என்றார்.

"நாடுகள் இப்போது ஒரே ஒரு கூட்டாளியைச் சார்ந்திருப்பதை விடுத்து, பல்வேறு நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன.

குவாட் மற்றும் பிரிக்ஸ் போன்ற குழுக்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, தனிப்பட்ட நாடுகள் தங்களின் நலன்களின் அடிப்படையில் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை உருவாக்கி வருகின்றன" என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com