

விநாயகர் பந்தல்களில் லட்டுகளை திருடி தின்றால் அதிர்ஷ்டம் எனும் மூடநம்பிக்கையை பயன்படுத்தி மர்ம கும்பல் இரவு நேரங்களில் லட்டுகள், உண்டியல் தொகை, விழா அமைப்பாளர்களின் செல்போன்களை கொள்ளையடிக்கிறது. பகல் நேரங்களில் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் பிக்பாக்கெட் கும்பல்கள் நகை, பணம், செல்போன்களை பறிப்பதால், போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் நள்ளிரவிற்கு பிறகு அயர்ந்து தூங்கி விடுகின்றனர். இதனை பயன்படுத்தி மர்ம கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் விநாயகர் பந்தலில் அமைக்கப்பட்டுள்ள லட்டுகளை திருடி தின்றால் அதிர்ஷடம் என வதந்தி பரவி வருகிறது.
கடந்த 2 நாட்களாக நள்ளிரவு நேரங்களில் விநாயகர் பந்தல்களில் மர்ம கும்பல் திருடி வருகின்றனர். அங்குள்ள லட்டுகள், உண்டியல் பணம், விழா அமைப்பாளர்களின் செல்போன்களை திருடி சென்றுவிட்டனர்.
இது ஒரு புறம் இருக்க பகல் நேரங்களில் விநாயகர் பந்தல் இருக்கும் இடங்களில் பிக்பாக்கெட் திருட்டு சம்பவங்களும் நடந்து வருகிறது. வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் நகை, பணம், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த பொருட்கள் திருடு போனாலும் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.